இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிப்பதை தடுக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகிலும் இரண்டு நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்து சென்றனர். மேலும் நேற்று முன் தினம் 7 மீனவர்களை கைது செய்தனர். இப்படி தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை அரசுடன் உடனடி பேச்சுவார்த்தையை நடத்தி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: