அதிமுக கொடியுடன் வந்த காரில் 2 லட்சம் வெள்ளி நகைகள் பறிமுதல்

வானூர்: விழுப்புரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 2 லட்சம் மதிப்புடைய வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள வானூர், திருவக்கரை, கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளியனூரில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுப்புராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் ஒன்று நோக்கி வந்தது. இதனை நிறுத்தி சோதனை செய்ததில் 332 மெட்டி, 24 பெரிய கொலுசுகள், 14 சிறிய கொலுசுகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

 இதையடுத்து, காரில் வந்த ராகுல், ஓட்டுநர் லட்சுமிபதி ஆகியோரிடம் கேட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், அவற்றை பறிமுதல் செய்து வானூரில் தாசில்தார் தங்கமணியிடம் ஒப்படைத்தனர். இந்த நகைகளின் மதிப்பு 2 லட்சம் ஆகும். இந்த நகைகள் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: