எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக செயல்படுகிறது தமிழகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடுதான் முதல்வராகியுள்ளேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்வராக ஆக்கியுள்ளனர். கட்சியில் சாதாரண தொண்டனாக இருந்த நான் படிப்படியாக உழைத்து வந்துள்ளேன். இந்த ஆட்சி 10 நாட்கள்கூட தாக்குப்பிடிக்காது என கூறினார்கள். 2 ஆண்டுகள் 8 மாதத்தை கடந்து வருகிறோம். எங்களிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆட்சிக்கு வரும்போது எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்களோ அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. மக்களுக்காக சேவை செய்யக்ககூடிய இயக்கமாகவும், ஆட்சியையும் நடத்தி கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா கண்ட கனவுகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழகம். 100க்கு 49 சதவீதம்பேர் உயர்கல்வி படிக்கிறார்கள்.  நீர்மேலாண்மை திட்டத்தின் மூலம் ஒரு சொட்டுமழைநீரைகூட வீணாக்காமல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2017ம் ஆண்டு 100 கோடி மதிப்பில் 1519 ஏரிகளும், 2018ம் ஆண்டு ₹328 கோடியில் 1514 ஏரிகளும், 2019ம் ஆண்டு ₹500 கோடியில் 1829 ஏரிகளிலும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கெங்கு தடுப்பணைகள் வேண்டுமோ அங்கு கட்டிக்கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் செயல்படுகிறது. கோதாவரி நதிநீர் இணைப்புதிட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: