254* ரன் விளாசினார் விராத் கோஹ்லி இந்தியா 5 விக்கெட்டுக்கு 601 ரன் குவித்து டிக்ளேர்: தென் ஆப்ரிக்கா திணறல்

புனே: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில் கேப்டன் கோஹ்லி அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழ்பபுக்கு 601 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்திருந்தது. ரோகித் 14, அகர்வால் 108, புஜாரா 58 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி 63 ரன், ரகானே 18 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ரகானே மிக நிதானமாக விளையாட, மறு முனையில் கோஹ்லி தனது 26வது சதத்தை நிறைவு செய்து அசத்தினார். கோஹ்லி - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 178 ரன் சேர்த்தது. ரகானே 59 ரன் எடுத்து (168 பந்து, 8 பவுண்டரி) மகராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். அடுத்து கோஹ்லியுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்தார்.

Advertising
Advertising

5வது விக்கெட்டுக்கு இருவரும் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர். ஜடேஜா அரை சதம் அடிக்க, கோஹ்லி இரட்டை சதம் விளாசினார். ஜடேஜாவும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 91 ரன் (104 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி முத்துசாமி சுழலில் டி புருயின் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.  இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன் என்ற ஸ்கோருடன் (156.3 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. கோஹ்லி 254 ரன்னுடன் (336 பந்து, 33 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 3, மகராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கிது. தொடக்க வீரர்கள் மார்க்ராம் (0), டீன் எல்கர் (6) இருவரும் உமேஷ் யாதவ் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். பவுமா 8 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட, தென் ஆப்ரிக்கா 9.1 ஓவரில் 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்துள்ளது (15 ஓவர்). டி புருயின் 20 ரன், நோர்ட்ஜே 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க 565 ரன் பின் தங்கியுள்ள தென் ஆப்ரிக்க அணி, பாலோ ஆன் தவிர்க்க வேண்டிய நெருக்கடியுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

7வது இரட்டை சதம்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தனது 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (6), விரேந்திர சேவக் (6) இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலக அளவில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (12), இலங்கை வீரர் குமார் சங்கக்கரா (11), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (9) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வாலி ஹம்மாண்ட், மகிளா ஜெயவர்தனே, கோஹ்லி தலா 7 இரட்டை சதங்களுடன் 4வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கோஹ்லி 7000:

டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன் சாதனை மைல்கல்லை கோஹ்லி நேற்று கடந்தார். அவர் தனது 138வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், இலங்கையின் குமார் சங்கக்கராவும் தலா 138 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். விரைவாக 7000 ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் வாலி ஹம்மாண்ட் (131 இன்னிங்ஸ்), வீரேந்திர சேவக் (134 இன்னிங்ஸ்), சச்சின் டெண்டுல்கர் (138 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

பிராட்மேனை முந்தினார்...

சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக முறை 150+ ஸ்கோர் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி (9 முறை) முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 8 முறை 150+ ஸ்கோர் எடுத்திருந்த நிலையில், அவரது சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இலங்கையின் மகிளா ஜெயவர்தனே, வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் ஆகியோர் கேப்டனாக விளையாடிய போட்டிகளில் தலா 7 முறை 150+ ஸ்கோர் எடுத்து 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்தின் அலஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் ஆகியோரைத் தொடர்ந்து, தனது 50வது டெஸ்டில் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. கேப்டனாக 40 சர்வதேச சதங்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Related Stories: