தமிழகத்திற்கான 5 ரயில் பாதை திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது : அன்புமணி வலியுறுத்தல்

சென்னை : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை- மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர், சென்னை ஆவடி- கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய 5 திட்டங்களால் பொருளாதார பயன்கள் கிடைக்காது என்பதால் இவற்றை கைவிடும்படி இந்திய ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளர்ச்சிக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

ஆவடி - கூடுவாஞ்சேரி இடையிலான பாதை ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் உதவும். அதேபோல், அத்திப்பட்டு - புத்தூர் ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை- திருவள்ளூர் வழித்தடத்தில் நெரிசல் குறைவதுடன், எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும். திண்டிவனம் - திருவண்ணாமலை பாதையும், ஈரோடு - பழனி பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கும் இந்த திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய இந்த 5 ரயில்வே திட்டங்களையும் ரத்து செய்யும் முடிவை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். மாறாக, மாநில அரசுடன் இணைந்து 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: