தொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை : செப்டம்பரில் வாகன விற்பனை 24% வீழ்ச்சி

டெல்லி: இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை மந்த நிலையை சந்தித்துள்ளது. செப்டம்பரில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை 23.7% வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது மாதமாக வாகன விற்பனை சரிந்துள்ளதாக இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீப காலமாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. உதிரிப் பாகங்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி போன்றவற்றுடன் போதிய விற்பனை இல்லாமல் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

Advertising
Advertising

வாகன விற்பனையின் முழு விவரம்

                      வாகனங்கள்    கார்கள்      மோட்டார் சைக்கிள்

 2018 செப்.       2,92,660               1,97,124          13,60,415   

 2019 செப்.        2,23,317               1,31,281           10,43,624

வீழ்ச்சி %          23.69                     33.4                    23.29

இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை குறித்த விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2,23,317 வாகனங்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 22.41 சதவீதம் வீழ்ச்சி

ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகன விற்பனையில் 22.09 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாட்டு வாகன விற்பனையிலும் 39.06 சதவீதம் வீழ்ச்சியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்துள்ளன.அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 20,04,932 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் 2018 செப்டம்பரில் 25,84,062 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 22.41 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

விற்பனை மந்தம் மற்றும் சரிவின் காரணமாக இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த தொடங்கியுள்ளன. மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார், ஹோண்டா, டாடா ஆகிய நிறுவனங்களின் பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. மேலும் கனரக வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட் தனக்கு சொந்தமான ஆலைகளின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பங்குச்சந்தை சரிவும், வாகன விற்பனையில் மந்த நிலையும் தான் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: