அ.தி.மு.க. மீது அதிருப்தி வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தூத்துக்குடி: அ.தி.மு.க. மீது அதிருப்தி வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வைகயில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 12 பேர் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரதமர்-சீன அதிபர் வருகையை ஒட்டி அவர்களை வரவேற்கும் பொருட்டு நாங்குநேரியில் முகாமிட்டிருந்த தமிழக அமைச்சர்கள் இன்று சென்னை புறப்பட்டனர். இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இடைத்தேர்தலில் பொதுமக்களோடு மக்களாக இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்போது தான் மகிழ்ச்சியாக பிரச்சாரம் செய்திட முடியும். மாமல்லபுரத்தை கண்டுபிடித்த நரசிம்ம பல்லவன் பெருமையை, தமிழன் பெருமையை இன்று உலக அரங்கில் எடுத்து செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும், என்று கூறினார்.

அப்போது கூட்டணி கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க. மீது அதிருப்தி வெளிப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. அதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக, அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்ததாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: