தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் இந்தியா 273 ரன் குவிப்பு':மயாங்க் அகர்வால் சதம்: புஜாரா, கோஹ்லி அரைசதம்

புனே: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  விசாகப்பட்டணத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்க அணியை வென்றது. 2வது டெஸ்ட் போட்டி, புனேவில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் களம் இறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் 10வது ஓவரை  ரபாடா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில், முதல் டெஸ்ட்டில் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய ரோகித் சர்மா 14 ரன்னில், கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.  

பின்னர் அகர்வாலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினர். அடுத்தடுத்து அகர்வால், புஜாரா அரை சதம் கடந்தனர். புஜாரா, 58 ரன்னில் ரபாடா பந்தில் தென்ஆப்ரிக்க  கேப்டன் டூ பிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போது, அணியின் ஸ்கோர் 163 ஆக  இருந்தது. அடுத்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்த,  அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினர். சிறப்பாக ஆடிய மயாங்க் அகர்வால் சதம் விளாசி அசத்தினார். இது அவருக்கு 2வது சதமாக அமைந்தது. ஆனால், இந்த ஜோடி நீண்டநேரம் களத்தில் இல்லை. ஆட்டத்தின் 61வது ஓவரில் ரபாடா  பந்தில் சதம் விளாசியிருந்த மயாங்க் அகர்வால் 108 ரன்னில் (16 பவுண்டரி, 2 சிக்சர்), டூ பிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன் எடுதிருந்தது.

4வது விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோஹ்லியுடன், துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் இறுதி வரை நிதானமாக ஆடியது. 50வது டெஸ்டில் ஆடும் விராட் கோஹ்லி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி,  அரை சதம் கடந்தார். இது அவருக்கு 23வது அரைசதமாகும். ஆட்டத்தின் 86வது ஓவரின் முதல் பந்து வீசிய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டத்தை நடுவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால், இந்தியா முதல்நாள்  ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories: