நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 7 சதவீதம் சரிவு

புதுடெல்லி: நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதங்களில் 7 சதவீதம் சரிந்துள்ளது.  தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில்  15 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த துறையில் அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், நடப்பு நிதியாண்டில் இந்த துறை சார்ந்த ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு  கவுன்சில் (ஜிஜெஇபிசி) புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 1,240 கோடி டாலர் மதிப்பிலான நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இது 1,340 கோடி டாலராக இருந்தது. இதில்,  நவரத்தினங்கள் ஏற்றுமதி 10.5 சதவீதமும், பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 19 சதவீதமும் சரிந்துள்ளது.

அதேநேரத்தில், தங்க மெடல்கள் 89.4 சதவீதம், நாணயங்கள் 83 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு நகை, நவரத்தினங்கள் ஏற்றுமதியாகின்றன.  ஒட்டுமொத்த நவரத்தினம், ஆபரண ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.  இறக்குமதியை பொறுத்தவரை பட்டை தீட்டப்படாத வைரங்கள் 25 சதவீதம் சரிந்து 540 கோடி டாலராகவும், தங்க கட்டிகள் இறக்குமதி  6.7 சதவீதம் சரிந்து 340 கோடி டாலராகவும் உள்ளது என ஜிஜெஇபிசி தெரிவித்துள்ளது.

Related Stories: