ஒரே குடும்பத்தில் 6 பேரை கொலை செய்த வழக்கு கைதான பெண் உள்பட 3 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்

திருவனந்தபுரம்: கேரளாவில்  6 பேர் கொலை வழக்கில் கைதான ஜோளி உட்பட 3 பேரையும் 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள  மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை  சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது  மனைவி ஜோளி கடந்த 2002 முதல் 2016க்கு உட்பட்ட காலகட்டத்தில் கணவர்,  மாமனார், மாமியார் உள்பட 6 பேரை கொலை செய்தார். அதோடு கணவரின் குடும்ப  சொத்தை தனது பெயருக்கு மாற்றினார்.  இந்த உயில் விவகாரத்தில்  சந்தேகம் இருப்பதாக ராய்தாமசின் சகோதரர்  ரோஜோ, போலீஸ்  மற்றும்  வருவாய்துறையில் புகார் செய்தார். விசாரணையில், போலி உயில்  தயாரித்து  மோசடி செய்ததும், 6 பேரையும் கொலை செய்ததும்  தெரிய வந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் கைதான ஜோளி, அவருக்கு சயனைடு  வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜிகுமார் ஆகிய 3 பேரும்  கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று தாமரசேரி நீதிமன்றத்தில் 3   பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஜோளி தனது கணவர் ராய் தாமசை கொல்ல 4  காரணங்கள்  கண்டறியப்பட்டுள்ளது. ராய் தாமஸ் குடிபோதைக்கு  அடிமையாகியிருந்தார்.  இது ஜோளிக்கு பிடிக்கவில்லை. ஜோளிக்கு பல ஆண்களுடன்  தகாத தொடர்பு இருந்துள்ளது. இதை ராய் தாமஸ் கண்டித்துள்ளார். இது தவிர  அவருக்கு மூட  நம்பிக்ைகயும் இருந்துள்ளது. மேலும் ராய் தாமசிற்கு நிரந்தர  வருமானமும் கிடையாது. எனவே நிரந்தர வருமானம் உள்ள ஒருவரை திருமணம் செய்ய ஜோளி விரும்பினார். இந்த நான்கு காரணங்களால் தான் அவர் ெகாலை செய்துள்ளார்  என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மனோஜ் மற்றும் பிரஜிகுமார் ஜாமீன் ேகாரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 3 பேரையும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது. 3  பேரையும் போலீசார் விசாரணைக்காக வடகரையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஜோளி நீதிமன்றத்திற்கு வரும்போதும் திரும்பும்போதும் அவரை காண நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பலத்த  போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஜோளியை பார்த்தபோது அவருக்கு எதிராக பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.  ஜோளியை கொலை நடந்த வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

தமிழகத்தில் வாங்கிய சயனைடு: சாதாரண நகைக்கடை ஊழியரான பிரஜிகுமாரிடம் கடந்த சில மாதங்களாக பண புழக்கம் அதிகமாக இருந்துள்ளது.

அவர் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். இவரிடம் இருந்துதான் சயனைடு வாங்கியதாக  ஜோளி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். ஜோளிக்கு மட்டுமல்லாமல்  பிரஜிகுமார் அந்த பகுதியை சேர்ந்த பலருக்கும் சயனைடு விற்பனை செய்துள்ளார். கோழிக்ேகாட்டில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இருந்து இவர் சயனைடு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில்  சயனைடு குறைந்த  விலைக்கு கிடைப்பதாக இவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்து  குறைந்த விலைக்கு சயனைடு வாங்கி பலமடங்கு அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். இதன்மூலம் தான் இவரிடம் பணபுழக்கம் அதிகரித்தது தெரிய  வந்துள்ளது.

பத்திரப்பதிவுக்கு உதவிய அதிகாரி மகளையும் கொல்ல முயற்சி?

ஜோளி மாமனாரின் சொத்துக்களை அபகரிக்க போலி உயில் தயாரிக்க, துணை தாசில்தாராக இருந்த  ஜெயஸ்ரீ தான் உதவியுள்ளார். ஜோளியின்  வீட்டின் அருகில் தான் ஜெயஸ்ரீ வசித்துள்ளார்.  இதனால் இருவரும் நெருக்கமாக  பழகி  வந்துள்ளனர். எனவே ஜெயஸ்ரீ குறித்தும்  போலீசார் விசாரணை நடத்தினர். இதில்  திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ஜெயஸ்ரீக்கு  3  வயதில் ஒரு மகள்  உண்டு. இந்த குழந்தை ஒன்றரை வயதாக இருந்த போது 2 முறை   வாந்தி எடுத்து   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  குழந்தை வாந்தி  எடுத்த இரு முறையும் ஜெயஸ்ரீ வீட்டில் ஜோளி மட்டுமே இருந்துள்ளார். இரு  முறையும் குழந்தை தீவிர   சிகிச்சைக்கு பிறகே உயிர் பிழைத்தது.   

ஜோளியின் கைதுக்கு  பிறகு நடந்த விசாரணையில், பெண்கள், பெண் குழந்தைகளை  தனக்கு பிடிக்காது  என்று போலீசில் கூறியுள்ளார். இதனால் ஜெயஸ்ரீயின்  குழந்தையையும் ஜோளிதான்  விஷம் கொடுத்து கொலை செய்ய  முயற்சித்திருக்க  வேண்டும் என்று போலீசார்  சந்தேகிக்கின்றனர்.

Related Stories: