இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்த மத்திய  அரசு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இதனை சர்வதேச பிரச்னையாக்க முயன்றது. இதற்கு `இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை’ என்று இந்தியா பதிலடி  கொடுத்தது.பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்றும், நாளையும் சென்னை  அருகே மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனிடையே,  ஜின்பிங்கின் இந்திய வருகைக்கு முன்பாக, பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் சில தினங்களுக்கு முன் அவரை சந்தித்ததால், மோடி-ஜின்பிங் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று தொடர் டிவிட்களை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், காஷ்மீர் நிலவரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக, சீன  அரசுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டத்தை நாங்களும் கவனித்து வருகிறோம். ஜின்ஜியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் கண்காணிக்கிறோம். திபெத்தில் தொடரும்  ஒடுக்குமுறையையும் கவனிக்கிறோம். தென் சீன கடல் பகுதியை சீனா எப்படி ஆக்ரமிக்கிறது என்பதையும் கண்காணித்து வருகிறோம்’ என்று பிரதமரும், வெளியுறவு அமைச்சகமும் ஏன் பதில்  அளிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அந்த தொடர் டிவிட்டில், அப்படியானால் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை  தடுப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்றுதானே அர்த்தம். பாகிஸ்தானிடம் இருந்து ஆக்ரமிப்பு காஷ்மீர்,  கில்ஜித்-பல்திஸ்தானை திரும்ப மீட்கவும், கடந்த 1963ல் பாகிஸ்தான் சட்ட விரோதமாக சீனாவுக்கு வழங்கிய அக்சாய் சின் பகுதியை  இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும்படியும் பேசும் அறிவாற்றல் பாஜ தலைமையிலான  தேசிய ஜனநாயக  கூட்டணிக்கு இல்லை. பிரதமர் மோடி அக்சாய் சின் பகுதியை திரும்ப தரும்படி ஜின்பிங்கிடம் கேட்பாரா?’ எனவும் கேட்டுள்ளார்.

Related Stories: