சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு மோடி-ஜின்பிங் இன்று வருகை: தலைவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரு  நாட்டு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய  முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி  சென்னைவருகிறார். மோடி, கோவளத்தில் உள்ள ஓட்டலிலும், சீன அதிபர் ஜின்பிங், கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலிலும் தங்குகின்றனர். இரு நாட்டு தலைவர்களும் இன்றும், நாளையும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில்  சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து  விவாதிக்கிறார்கள். இரண்டு நாள் சந்திப்பின்போது இரண்டு நாட்டு தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இன்று மதியம் சென்னை வரும் சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக  மாமல்லபுரம் செல்கிறார்.

முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்று கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை  பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்கு குண்டு துளைக்காத வகையில் அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சீன அதிபர் சாலை மார்க்கமாக கிண்டி திரும்புகிறார்.இதையடுத்து, 2வது நாளாக நாளை காலை 9 மணிக்கு சீன அதிபர் மீண்டும் கிண்டியில் இருந்து கோவளம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலில் இரு தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், பல்வேறு  ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை மதியம் சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இதற்காக இரு நாட்டு உணவு வகைகள் ஏற்பாடு செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சீன அதிபர் ஜின்பிங் சாலைமார்க்கமாக சென்னை வந்து தனி விமானம் மூலம் நேபாளம் செல்கிறார். பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.

சீன அதிபர் ஜின்பிங் சென்னை மற்றும் மாமல்லபுரம் வருவதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதி கடற்கரை அருகே உள்ளதால், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு  வரப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன், சீன பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 200 பேரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 55 கி.மீ. தூரம் சீன அதிபர்  பயணம் செய்ய உள்ளதால், வழிநெடுக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகருக்குள் எந்த வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி அவர்கள் செல்லும் பாதை முழுவதும் தமிழக பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சீன அதிபர் செல்லும்  பாதையில், 34 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பிரத்யேக மேடை அமைக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பூங்காக்கள், சாலைகளில் இந்திய மற்றும் சீன நாட்டு கொடிகள் பறக்க  விடப்பட்டுள்ளது. சீன அதிபர் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் பிரமாண்டமான நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் மற்றும் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.  கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வட இந்தியாவில் புகழ்பெற்ற நாசிக் டோல் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து பகுதிகளிலும் சுமார் 800 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.சீன அதிபர் தங்க ஏற்பாடு செய்துள்ள ஓட்டல், பிரதமர் மோடி தங்கவுள்ள ஓட்டல் மற்றும் இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  நேற்று, சீன அதிபர் செல்லும் பாதையில் வாகன ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சீன பிரதமர் பயணம் செய்வதற்காக 4 கார்கள் சீனாவில் இருந்து சென்னை வந்துள்ளது. குண்டு துளைக்காத மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன்  கொண்ட கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சென்னை விமான நிலையம் வருவதையொட்டி, அவர்களை வரவேற்க முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாமல்லபுரத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள், விவிஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன பிரதமர் தமிழகம் வருவதால் அவரை  வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

இரு நாட்டு கொடிகள்

மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில், இந்தியா, சீனாவின் தேசிய ெகாடிகள் வரிசையாக பறக்க விடப்பட்டுள்ளது. நேற்று மதியம் மத்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகுலே வருகை தந்து தலைவர்கள் பார்வையிட உள்ள  இடங்களை ஆய்வு செய்தார்.

பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

தலைவர்கள் வருகையொட்டி, கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் மட்டும் இன்றி இந்தியா, சீனாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மாமல்லபுரத்தில் முகாமிட்டு இருந்தனர். இவர்கள், இரு நாட்டு தலைவர்கள் செய்திகளை வழங்கி வந்தனர்.  இந்நிலையில், நேற்று மாலை முதல் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள் மட்டும், மூன்று நாட்களுக்கு விடுமுறை என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் வருகையையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரம் நெரிசலில்  சிக்கியபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்றும், நாளையும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஆய்வு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

சீன நிறுவனங்கள் அதிகரிக்கும்

தமிழக தலைநகரான சென்னைக்கு ஆசியாவின் டெட்ராய்ட் என்ற செல்ல பெயர் உள்ளது. டெட்ராய்ட் என்பது அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.  தமிழ்நாட்டில்  லெனோவா மற்றும் ஹுவாய் போன்ற 12 முதல் 15 சீன நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. சீனா - இந்தியா தலைவர்களின் பேச்சால் தமிழகத்தில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

போலீசார் அவதி

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு போதுமான உணவு, கழிவறை வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவிற்கு செய்து கொடுக்கப்படாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஓய்வு நேரத்தில்  கட்டாந்தரையிலும், மணலிலும் உட்காரவும், உறங்கவும் வேண்டிய நிலையுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட, மாமல்லபுரம், தேவனேரி, கொக்கிலமேடு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று நாட்களுக்கு விடுமுறை கல்வி துறை அறிவித்துள்ளது.

* 11 ம் ேததி அன்று 12.30 மணி முதல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் ‘ஜிரோ’ பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை  வழியாக திருப்பிவிடப்படும். மேலும், ெசன்னை தென் பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியால் சாலை வழியாக, குரோம்பேட்டை- தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை  பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

* 11ம் தேதி மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகங்களும் கத்திபாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல் 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

* 11ம் தேதி அன்று பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும், கிழக்கு  கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

* 12ம் தேதி அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வேரை ராஜீவ் காந்தி சாலை(ஓஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும், 12ம் தேதி  காலை 7 மணி முதுல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. இந்த போக்குவரத்து மாற்றங்களால், நகரில் இன்று  போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: