இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் ரசாயன உணவுகளால் 4.9 கோடி பேர் பாதிப்பு: விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் அடுக்குமாடிகள், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழிற்சாலைகள் கட்டமைப்பு போன்றவற்றுக்காக விவசாய  நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் குறைந்திருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் குறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால்,  அந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது சந்தேகம்தான்.

Advertising
Advertising

இதுபோன்ற சூழ்நிலையில் விவசாய சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்படும். எனவே, விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால், உணவு பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்து உயிருக்கு கேடு விளைவிப்பதோடு, மண்ணின் தரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைதடுக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர்.இதுதவிர பாஸ்ட் புட், தரமற்ற எண்ணெயில் தயாரித்த உணவுகள் உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவைகளை சீரமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது போலியோ முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 7 கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.

இவர்களில் 4.9 கோடிக்கும் மேற்பட்டோர் மூளைதிறன் பாதிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உணவுகளே மூளைதிறன் பாதிப்புக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து ரசாயன உணவுகள்  பயன்பாட்டால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதாகவும், கருவில் இருக்கும் குழந்தைகளும் ரசாயன உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தப்பவில்லை என்றும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் ஆராய்ச்சி  முடிவுகளில் தெரியவந்துள்ளது.இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி 40 நாட்களில் முழு வளர்ச்சி அடைகிறது. இதற்காக, 12 வகையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

ஒரு கிலோ கோழி இறைச்சியில் 600 கிராம் வரை ரசாயனம் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறைச்சியை சாப்பிடுவதால் கேன்சர் உள்பட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற  விளைவுகளை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, பிராணிகளுக்கான  மருந்துகளை தயாரிக்க தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து உள்ளது.அதேபோல், உணவின் சுவையை அதிகரிக்க  பயன்படுத்தப்படும் அஜினோமோட்டாவால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அஜினோமோட்டோ பயன்பாட்டுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடந்த சில நாட்கள் முன்பு முடிவெடுத்தது. ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த முடிவுகள்  பரிசீலனையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உணவுகளால் அதிகப்படியானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உணவு விற்பனையில் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும்  கோரிக்கை விடுக்கின்றனர்.

மாடி வீட்டு தோட்டம் அவசியம்: ஒவ்வொருவரது வீட்டிலும் தோட்டங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், அருகருகில் அமைந்த குடியிருப்புகளால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளில் மட்டுமே தோட்டங்கள்  தற்போது இருக்கிறது. இதனால், இருக்கும் இடத்தை பயன்படுத்தி இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் அமைக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில்  அதிலிருந்த விழிப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இந்தியாவில் 34 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய இயற்கையான காய்கறிகளை சாப்பிட  வேண்டும். எனவே, காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: