சின்னமுட்டம்-கூத்தன்குழி மீனவர் பிரச்னை: சார் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை...நெல்லை கலெக்டருக்கு மீனவர்கள் கடிதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை மாவட்டம் கூத்தன்குழி நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 30ம் தேதி  கூத்தங்குழியை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதை கண்டித்தும், இரு மாவட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்த கோரியும் சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த 12 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்  தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி விசைப்படகு சங்க நிர்வாகிகளுடன் பங்கு நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

Advertising
Advertising

 இதில் 11ம் தேதி (நாளை) நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மாவட்ட மீனவர்களுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி சின்னமுட்டம்  மீனவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து தொழில் செய்து வரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 21 மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ெநல்லை கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.  அதில், நெல்லை  மாவட்டம் செட்டிகுளம், இருக்கன்துறை, நாங்குநேரி, சங்குநேரி, யாக்கோபுரம், ஊரல்வாய்மொழி, லெவிஞ்சிபுரம், பழவூர், பெருமணல், பெரிய குளம் உள்பட 21 கிராமங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக  சின்னமுட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

இங்கு விசைப்படகு உரிமையாளர், ஓட்டுநர், மீனபிடி தொழிலாளர். வாகன ஓட்டுநர், தினக்கூலி பணியாளர், மீன் உலர்பணி என தொழில் செய்கிறோம். இருமாவட்ட மீனவர் பிரச்னை காரணமாக நாங்கள் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  குடும்பத்துடன் பசியும், பட்டினியுமாக அவதிப்படுகிறோம். எனவே நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும், எங்கள் வறுமையை போக்கவும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அனுபவப்படி சின்னமுட்டம் விசைப்படகுகள் கடலில் தங்கி தொழில் செய்ய அனுமதி அளித்தால் இருமாவட்ட மீனவர்களின் பிரச்னை தீர்க்கப்படும் என கூறியுள்ளனர்.

இது குறித்து சின்னமுட்டம் மீனவர்கள் கூறுகையில், சின்னமுட்டத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஒரு படகில் 21க்கும் அதிகமானோர் என 6000க்கும் அதிகமானோர் நேரடியாகவும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  மறைமுகமாகவும் பிழைப்பு நடத்தி வருகிறோம். இருமாவட்ட மீனவர் பிரச்னையால் 12 நாளாக ெதாழில் நடக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, ஏற்றுமதி பாதிப்பால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இருமாவட்ட மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறினர்.

Related Stories: