பாரம்பரியம் மாறாத கிராமங்கள் நாங்குநேரி தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் விவசாயிகள்...சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் வெற்றியை தீர்மானிப்பத்தில் விவசாயிகளின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் ராஜினாமா செய்து கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எம்பியாக வெற்றிபெற்றார். இதன் காரணமாக நாங்குநேரி தொகுதிக்கு வருகிற 21ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும்  போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகளும் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ்-அதிமுக வேட்பாளர்கள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

Advertising
Advertising

தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 385 பெண் வாக்காளர்களும் 4 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாங்குநேரி, களக்காடு, ஏர்வாடி, திருக்குறுங்குடி, சிங்கிகுளம், மாவடி, மூலைக்கரைப்பட்டி, ரெட்டியார்பட்டி, முன்னீர்பள்ளம் உள்ளிட்ட தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் வாழை  முக்கிய விவசாயமாக உள்ளது. காலம் காலமாக வாழை சாகுபடி செய்து இப்பகுதி விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். இதனால் விவசாயிகளே இத்தொகுதியில் அதிகம் உள்ளனர்.

இவர்களது வாக்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களில் பல கிராமத்தினர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின்  அனுதாபிகளாக உள்ளனர்.கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வசந்தகுமார் இத்தொகுதி விவசாயிகளின் முக்கியத்துவம் கருதி இந்த தொகுதியில் உள்ள குளங்கள் தூர்வாரவும் மற்றும் மராமத்து உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் தனது சொந்த செலவில் பொக்லைன்  இயந்திரம் வாங்கி கொடுத்தார். பல சீரமைப்பு பணிகளும் நடந்தன. இதனால் பலனடைந்த விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் காங்கிரசிடம் இருந்து இந்த  தொகுதியை கைப்பற்ற கடும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தினமும் அதிகாலை முதல் பிரசாரத்தை தொடங்குகின்றனர். தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் வந்தால் அவர்களுடன் சென்று திறந்த ஜீப்பிலும் கிராமங்களில் நடந்து சென்றும் மக்களை  சந்தித்து ஓட்டு சேகரிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு விஐபிகள் பிரசாரத்திற்கு வந்து செல்வதால் நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரம் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories: