×

கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரத்தில் மீண்டும் ஒரு வரலாறு: செங்கொடி பொருத்திய பாரம்பரிய சீனா கார் சென்னை வந்தது

பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நாளை (அக். 11)  வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடக்கிறது. நாளை இந்தியா வரும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்காக சீனாவிலிருந்து பாரம்பரியமிக்க நான்கு சொகுசு கார்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன. அத்துடன் சீனாவின் கம்யூனிசத்தை பிரதிபலிக்கும் வகையில் செங்கொடியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா வரும் சீன அதிபர் செங்கொடி பொருத்தப்பட்ட சீனாவின் பாரம்பரிய ஹாங்கி காரில் பயணிக்க உள்ளார். ஹாங்கி என்பது செங்கொடி என்று சீனா மொழியில் பொருள் சொல்லப்படுகிறது. முன்னாள் அதிபரும், சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் டெங் ஜியாயோபிங் 1984ல் ஹாங்கி காரில் சீன ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். அதிலிருந்து ஹாங்கி காருக்கு மவுசு வந்தது. முன்னதாக ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவை சேர்ந்த டெக்னிஷியன்கள் சீனாவின் பர்ஸ்ட் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 1950ல் ஹாங்கி காரை வடிவமைத்து உருவாக்கினார்கள்.

நாளடைவில் சொகுசு கார்கள் வரவால் இதன் மவுசு குறைந்தது. இதனால் 1981 முதல் 1983 வரை ஹாங்கி கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நிலைமை 1984ல் டெங் ஜியோவோங்பிங் ஹாங்கி காரை பயன்படுத்தியபிறகு மாறியது. அதன்பிறகு ஹாங்கி கார் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போதுள்ள ஹாங்கி கார் 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் அதிபர் மற்றும் பிரதான தலைவர்கள் பயன்படுத்துவதற்காக பழைய பாரம்பரிய காரின் வடிவத்தை மாற்றாமல் அதில் நவீன பாதுகாப்பு அம்சங்களும், குண்டு துளைக்காத புல்லட் ஃபுருப் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்காரை தற்போதைய சீனா அதிபர் ஜி ஜின்பிங், தான் பங்கேற்கும் அதிகாரப் பூர்வ நிகழ்ச்சிகளிலும், ராணுவ அணிவகுப்பை பார்வையிடும்போதும் பயன்படுத்துகிறார். இக்கார் 18 அடி நீளம், 6.5 அடி அகலம் மற்றும் 5 அடி உயரம், 3,152 கிலோ எடையும் உடையது.

கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவன்...

தமிழ்நாடு அதுவும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு அமைந்திருப்பது பொருத்தமானது. கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் சீனாவுடன் வணிகம் நடத்தியதிலிருந்து இந்திய துறவியான போதி தர்மர் சீனா சென்று உயிர்கொல்லி நோய்க்கு மருந்து கண்டறிந்து தந்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாறியதுவரை இந்தியா, சீனாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதம் சீனக் கலாச்சாரத்தை கட்டமைத்தது. ஆனாலும்,  அரசியல் ரீதியான சீனா- இந்தியா  உறவு 1949-ல் மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவிய பிறகே தொடங்கியதாக வரலாற்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். புதிய சீன அரசை அங்கீகரித்த கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளில் இந்தியாதான் முதலாவதாக இருந்தது. ஆனாலும் அப்போதிருந்தே எல்லைப் பிரச்னை நீடிக்கிறது.

 காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சை சின் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதிக்கு இந்தியா உரிமை கோரிவருகிறது. இரண்டாவதாக, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் என்கிற பகுதியைச் சீனா கோரிவருகிறது.  இரண்டு நாடுகளுக்கிடையில் எண்ணற்ற பிரச்னைகள் இருப்பது உண்மை

தான்.  பல நாள் பிரச்னைகளுக்கு மாமல்லபுர கடற்கரையில் ஒரே நாளில் தீர்வு கண்டுவிட முடியாதுதான்.  ஆனாலும் இது இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவையும், பாரம்பரியத்தையும் பகிர்ந்துகொள்ளும் திருப்புமுனை சந்திப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.1961ம் ஆண்டு திரைக்கு வந்த குமுதம் படத்தில் கவியரசு கண்ணதாசன், ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்ற பாடலில்...

..பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை..’ என்ற வார்த்தைகளை எழுதியிருப்பார். உலகெங்கும் தேடினாலும் மாமல்லபுரம்போன்ற ஒரு சிறப்பான இடம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டது மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.Tags : Mamallapuram ,Chinese ,Chennai , Mamallapuram, a traditional Chinese car in Chennai
× RELATED மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம்...