கீழ்பென்னாத்தூர் அருகே மட்டமலையில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீஆதிநாத் திருத்தங்கர் சிற்பம்

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வழுதலங்குணம் கிராமத்தில் 100 அடி உயர மட்டமலை உள்ளது. இங்குள்ள பாறையில் ஸ்ரீஆதிநாத் திருத்தங்கர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2004ம்  ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இச்சிலையானது சுமார் 1800ஆண்டுகள் பழமையானது என கண்டறியப்பட்டு அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியை சக்தி வாய்ந்த இடமாக கருதிய  ஜெயின அரசர்களும், முனிவர்களும் இங்கு வந்து தங்கி வழிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களிருந்து வரும் துறவிகள், மலை மீது அமர்ந்து தியானம் செய்வதற்காக ஸ்ரீ ஆதிநாத் தீர்த்தங்கர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை செதுக்கப்பட்டுள்ள பாறையின்  கீழ்ப்பகுதியில் துறவிகள் தியானம் செய்வதற்கும், ஓய்வு எடுப்பதற்காகவும் 10க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளது.

 மேலும் துறவிகளின் மதகுருவின் பாதமும் காணப்படுகிறது. இந்த பாறையின் 300  மீட்டர் தொலைவில் ஒரு சுரங்கப்பாதையும், அதில் வற்றாத சுனையும் உள்ளது. மேலும் மலை மீது உள்ள ஒரு சிறிய கோயிலில் விநாயகர், முருகர், ஆதிநாத் தீர்த்தங்கரும் அருள்பாலித்து வருகின்றனர்.இங்கு தியானம் செய்ய வரும் துறவிகள், கிராமத்தில் உள்ள குளத்தில் கை, கால்கள் கழுவியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். இதனால் துறவிகள் இரவில் வேறுபகுதிக்கு சென்று சந்திரனை  வணங்கி ஆசி பெற்றுள்ளனர். சந்திரனை வணங்கி தங்கியதால் அப்பகுதி சோமாசிபாடி என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. நாளடைவில் சோமாசிபாடியில் சிறிய கோயில் எழுப்பி ஆதிநாத் தீர்த்தங்கர்  சிலையை நிறுவியுள்ளனர். பின்பு 1947ம் ஆண்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு சாந்திநாத சுவாமி சிலை நிறுவியதாக கூறப்படுகிறது. அவ்வாறு குடிபெயர்ந்த ஜெயினர்கள் தற்போதும் சோமாசிபாடியில் வசித்து  வருகின்றனர்.

சோமாசிபாடியில் உள்ள ஜெயினர்களும் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள ஜெயினர்களும் ஆண்டுக்கு ஒரு முறை வழுதலங்குணம் கிராமத்தில் உள்ள மட்ட மலையில் அமைந்துள்ள ஸ்ரீஆதிநாத் திருத்தங்கர்  சிலைக்கு, அட்சய திரிதியை அன்று சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் நோயின்றி, செல்வ செழிப்போடு வாழ்வதாக கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த 1800 ஆண்டு பழமையான இந்த பகுதியை பாதுகாக்கவும், மலைக்கு சென்று வர பாதை அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: