தஞ்சை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம்: தஞ்சை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியார் அக்கோவிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர், 56 கிலோ எடை கொண்ட திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிவன் சிலைகளை வழங்கினார். அந்த 2 சிலைகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகின. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், 2 சிலைகளும் தஞ்சை கலைக்கூடத்தில் இருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Advertising
Advertising

இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் கலைக்கூடத்துக்கு வந்து, கடந்த 5ம் தேதி இரண்டு சிலைகளையும் மீ்ட்டனர். பின்னர் கும்பகோணத்திலுள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 சிலைகளையும் போலீசார் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2 சிலைகளும் அந்த மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. மீட்கப்பட்ட 2 சிலைகளும் முன்னதாக ராஜகோபாலசுவாமி கோவிலிலும் அதன் பின்னர் தஞ்சை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியிருந்தார். இந்த இரண்டு சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனதாக சொல்ப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: