மோடி - ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு

சென்னை: மோடி - ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  நாளை பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் சென்றனர். வழியெங்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்து விரைவுபடுத்தினர்.மாமல்லபுரத்திலும் அவர்கள் ஆய்வு செய்தனர். அர்ஜூனன் தபசு, கடற்கரை கோவில், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை நடத்தினர்.

இந்திய பிரதமர், சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு, சீன வானொலியின் தமிழ் பிரிவு சார்பாக சீன - இந்திய சந்திப்பு என்கிற தலைப்பில் சென்னையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டு தூதரக பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள, சீன வானொலியின் தமிழ் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் சீனப் பெண்கள் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீன மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் மூவரும் நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தினர்.

Related Stories: