போலீஸ் தடையை மீறி கோவை மாநகராட்சியை கண்டித்து திமுக கட்சியினர் கருப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் : 1000க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : கோவையில் குடிநீர் விநியோக உரிமையை வெளிநாட்டிற்கு வழங்கிய மாநகராட்சியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் கலந்து கொண்டனர். கோவை மாநகராட்சி அறிவித்துள்ள 100% சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Advertising
Advertising

இதனிடையே மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ.வுமான கார்த்திக் தலைமை தாங்கினார். இப்போராட்டத்துக்கு மாநகர போலீசார் தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர். மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து கோஷம் போட்டனர். தடையை மீறிய காரணத்தால் கார்த்திக் எம்எல்ஏ உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாநகரில் உள்ள 5 திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். சொத்துவரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக அறிவித்துள்ளது. முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: