கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள், அங்கிருந்த கடை ஒன்றின் முன்பக்க சுவற்றை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை நாசமாக்கின. கடந்த ஒருமாத காலமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், அருகாமையில் இருக்கும் தேயிலை தோட்டம் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தாய்முடி டீ எஸ்டேட் -ன் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள், நள்ளிரவில் 6 காட்டுயானைகள் புகுந்தன.

அங்குள்ள மளிகை கடையின் முன்பக்க சுவற்றை உடைத்து உள்ளே இருந்த பால் பவுடர் மற்றும் மளிகை பொருட்களை சேதப்படுத்தின. சத்தம் கேட்டு எழுந்த பொதுமக்கள் தோட்ட காவலர்களின் உதவியோடு காட்டுயானைகளை விரட்டினர். இதனால் பாதுகாப்பாக மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, சக்கரை, பருப்பு ஆகியவை தப்பின. இச்சம்பவம் குறித்து வால்பாறை வருவாய்துறையினர் காலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காட்டுயானைகள் அப்பகுதியில் முகாமிட்டு வருவதால் இன்று இரவும் வரும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: