×

வெளிநாடுகளின் ஆற்றங்கரை போல அழகாக்குவதாக கூறி வைகையை ஓடையாக மாற்றுவதாக குற்றச்சாட்டு

*ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் விறுவிறு

மதுரை : வெளிநாடுகளில் உள்ள ஆற்றங்கரை போல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை வைகை நதி புதுப்பொலிவு பெறப்போவதாகவும், இதற்காக இரு பக்க கரைகளிலும் பச்சை பசேலென பூங்கா அமைத்து, ஒளி வெள்ளம் பாய்ச்சும் விதமாக எல்இடி பல்புகள் பொருத்தி அழகாக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. ஆனால், வைகை நதியின் அகலத்தை குறைத்து ஓடையாக மாற்றப்பட்டு வருவதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரை குறுக்கிடும் வைகை ஆற்றில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டது.

இதற்காக பொதுப்பணித்துறையிடம் தடையில்லா சான்று கோரப்பட்டது. ஆற்றை எந்த விதத்திலும் சுருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தடையில்லா சான்றை பொதுப்பணித்துறை மதுரை மாநகராட்சிக்கு வழங்கியது. பின்னர் மாநகராட்சி அனுமதி கோரியதன் பேரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை நதியை புதுப்பொலிவாக்க ரூ. 81.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து வைகை ஆற்றின் தென்பகுதியில் 84, 85, 53 ஆகிய வார்டுகள், வடபகுதியில் 40, 39, 38, 35 ஆகிய வார்டுகள் வரை ஆற்றுக்கரை பகுதிகள் புதுப்பொலிவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.


alignment=



இதன்படி, ராஜா மில்ரோட்டில் துவங்கி குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இருபுறமும் கான்க்ரீட் சுவர் எழுப்பப்படுகிறது. கரையில் சுவருக்கு வலது பக்கப்பகுதிகள் பூங்காவாக உருவாக்கப்படவுள்ளது. மேலும் ஆற்றுப்படுகை முழுவதும் புதர்கள், முட்செடிகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்படுத்தும் பணி விரைவில் துவங்க இருக்கிறது. பூங்கா முடிவில் முற்றிலும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு, நடைபாதைகள் மேம்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் செடிகளை கொண்டு அரண் அமைக்கப்படவுள்ளது.


alignment=



மேலும் பூங்கா முழுவதும் பசுமைப்பகுதியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் அமரும் வகையில் ஸ்டோன் பென்ச், குடிநீர் வசதிகளும் செய்யப்படவுள்ளன. இரவு நேரங்களில் பூங்கா உள்ளிட்ட கரைப்பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்திய மின்கம்பங்களும் அமைக்கப்படவுள்ளன. முற்றிலும் இரவுநேரத்தில் வைகைக்கரை பளிச்சென ஒளி வெள்ளத்தில் மிதக்கும் வகையில் மாற்ற திட்டமிடப்பட்டு இவற்றை பராமரிக்கும் வகையில் சுகாதார அமைப்புகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

மொத்தத்தில் வெளிநாடுகளில் உள்ள ஆற்றங்கரைகளை போல மதுரையில் இடைபடும் வைகை கரை அழகுபடுத்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்து, இதற்கான பணிகளை செய்து வருகிறது. இதுகுறித்து மதுரை ஆர்வலர்கள் கூறும்போது, ‘வைகை நதிக்கென தொன்மையான வரலாறு இருக்கிறது. ஆன்மிக நகரான மதுரையை கடந்து போகும் வைகையை பராமரித்து அழகுபடுத்துவது நல்லது. அதேநேரம், சாலையை அகலப்படுத்துவதாக கூறி, ஆற்று கரையையும் கடந்து உள்ளே கான்கிரீட் சுவர் எழுப்பி இருப்பது, நதியை ஓடையாக மாற்றும் முயற்சியாக இருக்கிறது. மாநகராட்சி எந்த வகையிலும் வைகை நதியை சுருக்கி, அழிவுக்கு கொண்டு சேர்க்கக் கூடாது. எனவே மாவட்ட நிர்வாகம், அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு மதுரையின் அடையாள பெருமைக்குரிய வைகை நதியை காக்க வேண்டும்’ என்றனர்.

Tags : river ,Vaigai ,city work ,Vaigai Rivers , smart city Work , vaigai river, madurai
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி