×

தேசிய அளவில் பணக்கார மாநில கட்சிகளின் பட்டியலில் ரூ.583.28 கோடி சொத்து மதிப்புடன் சமாஜ்வாதி கட்சி முதலிடம் !!

டெல்லி: இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திமுக கட்சி ரூ.191.64 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது பணக்கார கட்சியாகவும் அதிமுக ரூ. 189.54 கோடி சொத்து மதிப்புகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

 பணக்கார கட்சிகளின் பட்டியல்

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில கட்சிகள் தங்கள் சொத்துக் கணக்கு, வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையத்திடமும் அளிக்க வேண்டும். இந்நிலையில், நாட்டின் 41க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள், 2017-18-ம் நிதியாண்டில், தங்களது சொத்து விவரங்கள், வங்கி முதலீடுகள், இதர வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் வாயிலாக கிடைத்தவைகளை தேர்தல் ஆணையத்திடமும், வருமான வரி்த்துறையிடமும் சமர்பித்தது. அதன் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி நாட்டில் பணக்கார கட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320.06 கோடியாக இருந்தது. கடந்த 2016-17-ம் ஆண்டு 39 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,267.81 கோடியாக இருந்தது.

சமாஜ்வாடி கட்சி முதல் இடம்

ரூ.583.28 கோடி சொத்து மதிப்பினை பெற்று தேசிய அளவில் பணக்கார கட்சி பட்டியலில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு ரூ.571.12 கோடியாக இருந்தது. அதன்படி 2017-18-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு 2.13 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிமுகவை முந்தியது திமுக.

இதற்கு அடுத்தபடியாக பணக்கார மாநில கட்சி பட்டியலில் திமுக. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அதிமுகவும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிமுகவின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது. தற்போது அதிமுகவின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அதிமுக.வை பின்னுக்கு தள்ளி, திமுக. முந்தியிருக்கிறது.

பாமக- தேமுதிக.

பாமக. உள்ளிட்ட சில மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு எதிர்மறையாக குறைந்திருக்கிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் பாமகவின் சொத்து மதிப்பு ரூ.2.63 கோடியாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு ரூ.2.59 கோடியாக குறைந்திருக்கிறது. தேமுதிகவுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு சொத்து மதிப்பு ரூ.67 லட்சமாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு 87 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 28.5 சதவீத உயர்வு ஆகும்.இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Samajwadi Party ,state parties , Samajwadi Party, MP, DMK, DMK, DMK, property value
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மாநகர பட்டியலில் சென்னை, பெங்களூரு