பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசுக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி

சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தர தூண்டில் வளைவு சுவர் அமைக்க தமிழக அரசுக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பழவேற்காடு பகுதியில் கோட்டகுப்பம், லைட்அவுஸ் குப்பம், பழவேற்காடு தாங்கல், பெரும்புலம், என நான்கு ஊராட்சிகளில் 46 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரி-கடல் இணையும் பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடிக்கிடப்பதால் தாங்கள் அவதியடைந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

குறிப்பாக தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று அந்த பகுதியில் நிரந்தர வளைவு அமைக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்ட போது சுற்றுசூழல் பாதிப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்திருந்தது. மேலும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பிறகு தமிழக அரசு மத்திய அரசிடம் முறையாக அனுமதி கோரி பழவேற்காடு ஏரி மணல் திட்டுகளை தூர்வாரி ரூ.27 கோடி மதிப்பில் நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் துறை, கடந்த செப்டம்பர் 23ம் தேதி பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசுக்கு மத்திய சுற்றுசூழல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: