திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண்...!

செங்கம்: திருச்சி நகைக்கடை கொள்ளையில் தேடப்பட்ட குற்றவாளி சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் பிரபல நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் முதலில் சந்தேகித்தனர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில், வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அப்போது சுரேஷ் என்பவர் தப்பி ஓடினார். கைதானவர்களிடம் இருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷின் தாய் கனகவள்ளியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மணிகண்டன், கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சுரேஷ், முருகனை பிடித்த மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Related Stories: