சீன அதிபர்-பிரதமர் மோடி வருகை: விடுமுறை அளிப்பது குறித்து கல்வி நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: சீன அதிபர் ஜீ ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பின்போது விடுமுறை அளிப்பது குறித்து ஓ.எம்.ஆர் சாலையில் செயல்படும் கல்வி நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பதாக தனியார் பள்ளி கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியில் மாமல்லபுரம் வருகையை ஒட்டி ஓ.எம்.ஆர் சாலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சீன அதிபர் வரும் வழிநெடுக பலர் அவரை வரவேற்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்நிலையில், சீன அதிபரை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களையும் அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள், தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertising
Advertising

இதற்காக ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 200 முதல் 250 மாணவர்கள் வரையிலும், அவர்களோடு பள்ளி வாகனத்தையும் அனுப்ப வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்தனை மாணவர்களை பள்ளியில் இருந்து அனுப்புவதால், பள்ளிக்கு விடுமுறை அளித்துக்கொள்ளலாமா என்று மாவட்ட அதிகாரிகளிடம் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாது, பள்ளி வாகனங்களையும் அனுப்ப வேண்டும் என்பதால், பள்ளியை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதையும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், அதிகாரப்பூர்வமாக இதனை எங்களால் தெரிவிக்க முடியாது. ஆனால், பள்ளியை நடத்துவதில் சிரமம் இருந்தால், நீங்களே விடுமுறையை அறிவிப்பது குறித்த முடிவை எடுத்துக்கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, பள்ளியை இயக்கலாமா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய தனியார் சிபிஎஸ்இ மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் பாட்ஷா, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள எங்களுக்கும், எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசே ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும், என்று கூறியுள்ளார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: