சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்: நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுர மற்றும் தருமபுரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 30 நடமாடும் மருத்துவமனை, 100 நிலவேம்பு குடிநீர் வாகனங்கள் 30 கொசு ஒழிப்பு வாகனங்கள் என 160 வாகன பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தருமபுரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில், காய்யச்சலை கட்டுப்படுத்த, சென்னையில் 100 நடமாடும் வாகனங்கள் மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்கள் மூலமாகவும் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வீதம் 7 நாட்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 380 மருத்துவக் குழுக்கள் மற்றும், பள்ளி சிறாருக்கான 800 மருத்துவக் குழுக்களும் டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். காய்ச்சல் ஒழித்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், கொசுக்களை ஒழிக்க புகை வாகனங்களும் இன்று சென்னைக்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன.

Related Stories: