×

தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2120 பேர் உயிரிழப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2120 பேர் உயிரிழந்தததாகவும், 46 பேர் மாயமாகியுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 8ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்தது. நாடு முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டதாக என வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. எனினும் சில பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக கடந்த 1994ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக அதிக மழை கிடைத்திருப்பதாகவும்,

இது இயல்பான அளவுக்கு மேல் என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அதிக சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 2120 பேர் உயிரிழந்துள்ளனர். 738 காயம் அடைந்துள்ளனர். மேலும் 46 பேர் மாயமாகி உள்ளனர். இதேபோல 20,000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தால், 7.19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 305 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தால் 1.09 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 2.05 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன.

மேலும், 14.14 லட்சம் ஹெக்டேர் பயிர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 399 பேரும் மேற்கு வங்கத்தில் 227 பேரும் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தில் 182 பேரும், பீகாரில் 166 பேரும் பலியாகினர். பீகார் மாநிலம் வெள்ளப் பாதிப்பிலிருந்து, இன்னும் மீளவில்லை. இந்த மாநிலத்தில், இதுவரை, 161 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாதங்கள் நீடித்த இந்த தென்மேற்கு பருவமழையில் நாடு முழுவதும் 357 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பை அடைந்துள்ளன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : South-West , Southwest Monsoon, Ministry of Interior
× RELATED கேரளாவில் தென்மேற்கு பருவமழை...