மெரினாவில் நேற்றிரவு பரபரப்பு சம்பவம் 2 குழந்தைகளை கழுத்தறுத்து பெண் தற்கொலை முயற்சி : சிறுமி பரிதாப பலி

சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகே, நேற்று இரவு பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளின் கழுத்தறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருரை சேர்ந்தவர் பவித்ரா (32). இவர் தனது கனவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தனுஸ்யா(6) என்ற மகளும், பத்மேஷ்(3) என்ற மகனும் உள்ளனர். தனுஷ்யா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். பவித்ராவுக்கு, அவரது கனவருக்கும் இடையே ஓராண்டுகளாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பவித்ரா, கணவருடன் கோபித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து தனது மகள், மகனுடன் சென்னைக்கு பேருந்தில் வந்துள்ளார். பின்னர் நேற்று இரவு மெரினாவிற்கு வந்தார். இங்கு குழந்தைகளுடன் பொழுதை செலவிட்டார்.
Advertising
Advertising

குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் போன்ற உணவு வகைகளை வாங்கிக்கொடுத்தார். பிறகு விவேகானந்தர் இல்லம் அருகே அமர்ந்து கொண்டிருந்த பவித்ரா, திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து தனுஸ்யாவை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்தார்.

பிறகு மூன்று வயது பத்மேஷின் கழுத்தையும் அறுத்தார். இதில் குழந்தைகள் வலி தாங்க முடியாமல் துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது பவித்ராவும் தனக்கு, தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பொதுமக்கள் இதைக்கண்டு செய்வதறியாமல் தவித்தனர். உடனே சம்பவம் குறித்து மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மூன்று பேரையும் அருகில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது பெண்குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பவித்ரா மற்றும் பத்மேஷ் இருவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மெரினா போலீசார், பவித்ராவின் செல்போனில் உள்ள கணவரின் போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர் அவசரமாக சென்னை புறப்பட்டார். பவித்ரா கழுத்து அறுபட்டநிலையில் சிகிச்சை பெறுவதால், அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை. பவித்ராவின் கணவர் சென்னை வந்த பிறகே தற்கொலை குறித்து முழு விபரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மெரினா கடற்கரையில் மக்கள் மத்தியில் ெபண் ஒருவர் தனது குழந்தைகளை கழுத்தறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: