வாழ பிடிக்காததால் வெறிச்செயல் கத்தியால் கழுத்தை அறுத்து தாய் படுகொலை: தற்கொலைக்கு முயன்ற மகனுக்கு சிகிச்சை

வேளச்சேரி: பள்ளிக்கரணையில், வாழ பிடிக்காமல் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற மகனுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர், 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி (72). இவர்களது மகன் எத்திராஜ் (எ) ரமேஷ் (43). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக 8 மாதத்துக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன் பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மற்றும் ரமேஷ் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று காலை ரமேஷின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது ரமேஷின் வயிற்றில் கத்தி குத்திய நிலையில் அதை எடுக்க முயற்சித்தபோது வெளியே வராததால் வலி தாங்க முடியாமல் கத்தியது தெரியவந்தது. அதே சமயத்தில் அவரது அருகில் அம்மா சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயங்களுடன் இறந்துகிடந்தார்.

Advertising
Advertising

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து கத்தியை எடுத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சரஸ்வதியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வாழ பிடிக்காமல் தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: