இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயாவுக்கு சிறிசேனா ஆதரவு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது. எனவே, அடுத்த மாதம் அங்கு அதிபர் ேதர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா ராஜபக்சே, லங்கா பொதுஜன பிரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடைசி நாளான கடந்த ஞாயிறன்று, டெபாசிட் தொகையை அதிபர் சிறிசேனா செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதிபர் சிறிசேனாவின் லங்கா சுதந்திர கட்சி சார்பில் டெபாசிட் தொகையை செலுத்தாததால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தகுதி இல்லை. எனவே சிறிசேனாவின் கட்சியினால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபயா  ராஜபக்சேவுக்கு சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லங்கா சுதந்திரா கட்சியின் பொது செயலாளர் தயா ஜெயசேகரா கூறுகையில், “ அதிபர் தேர்தலில் கோத்தபயாவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஒரு ஒப்பந்தத்துடன் கோத்தபயாவுடன் இணைகிறோம். கோத்தபயாவுக்கு தான் ஆதரவே தவிர லங்கா பொதுஜன பிரமுனா கட்சிக்கு இல்லை,” என்றார். தற்போதைய அதிபர், பிரதமர் மற்றும் பிரதான எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடாமல் நடைபெறும் முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.

Related Stories: