விஷால் மீதான வருமானவரி வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாலுக்கு, சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற திரைப்பட நிறுவனம் சென்னை வடபழனியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், பலருக்கு சம்பளம் வழங்கப்பட்டு, அதற்காக வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது (டிடிஎஸ்). ஆனால் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 4 கோடி வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் நடிகர் விஷால் குறிப்பிட்ட காலத்திற்குள், வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, அறிந்த வருமான வரித்துறை பல முறை விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விஷாலிடம் இருந்து எந்த சரியான விளக்கமும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வருமான வரித்துறை வழக்கறிஞர் ஷீலா சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம், நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தபோது விஷாலுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் விஷால் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேரில் சரணடைந்தார். அப்போது நீதிபதி ரூ.4 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி சமரசம் செய்துகொள்ளுங்கள், இல்லை வழக்கு நடத்துவதாக இருந்தால் கூறுங்கள். வழக்கை நடத்தலாம் என்றால் சாட்சி விசாரணைகளை தொடங்கலாம் என்று கூறி விஷாலின் நிலைப்பாட்டை கேட்டிறிருந்தார். இந்தநிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி விடுமுறையில் சென்றுள்ளதால் வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் விஷால் தரப்பு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vishal , Income tax case, Vishal postponed
× RELATED வருமானவரி வழக்கில் விடுவிக்க கோரிய...