×

வெங்காயத்தை தொடர்ந்து டெல்லியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு : கிலோ 80க்கு விற்பனை

புதுடெல்லி: அதிக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் சப்ளை பாதிப்பு காரணமாக, வெங்காயத்தை தொடர்ந்து தக்காளியின் விலை டெல்லியில் கிலோ 80 வரை உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக  வெங்காயம், தக்காளி போன்றவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மகசூல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டெல்லியில் வெங்காயத்தின் விலை ₹80 அதிகரித்த நிலையில், மாநில அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடமாடும் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் தற்போது டெல்லியில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து கிலோ ₹60 என்கிற அளவில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தக்காளி விலை திடீரென அதிகரித்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ தக்காளி தற்போது 80 என்கிற அளவில் விற்கப்படுகிறது. இதுகுறித்து ஆசாத்பூர் மண்டியின் மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘‘சப்ளை குறைந்ததால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. மதர் டெய்ரியின் நியாய விலை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 58க்கு விற்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் வியாபாரிகளிடம் ஒரு கிலோ 60 முதல் 80 வரை விற்கப்படுகிறது. தரம் மற்றும் விற்கப்படும் பகுதியை பொருத்து விலை மாற்றம் உள்ளது’’ என்றனர்.

Tags : Delhi , Increase , tomato prices ,Delhi following onion
× RELATED டெல்லியில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி