×

காஷ்மீரில் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள் வரவில்லை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் யாரும் வரவில்லை. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து, வன்முறைகள், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது, இம்மாநிலத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றது. பள்ளத்தாக்கு முழுவதும் தரைவழி தொலைதொடர்பு சேவை தொடங்கியுள்ளது. சாலையோர கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. 66வது நாளான நேற்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. காலை 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்குகின்றன. பின்னர், சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வியாபாரிகள் கடைகளை மூடிவிடுகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதை போன்று நேற்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான பேராசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர். ஆனால், மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வரவில்லை.  பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்; காங். புறக்கணிப்பு

ஜம்மு காஷ்மீரில் வருகிற 24ம் தேதி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாகும். ஆனால், இந்த தேர்தலை புறக்கணிப்பது என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி ஏ மிர் கூறுகையில், “ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நம்புகிறது. எந்தவொரு தேர்தலில் இருந்தும் காங்கிரஸ் ஒருபோதும் விலகி செல்லவில்லை. ஆனால், மாநில நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு இருப்பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிப்பது என முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது,” என்றார்.

Tags : Open Colleges ,Kashmir ,Colleges , Colleges in Kashmir,No students coming
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...