மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் : வக்கீல் மீது போலீஸ் நடவடிக்கை

பாட்னா: திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட இயக்குனர் அபர்னா சென், வரலாற்று பேராசிரியர்  ராமச்சந்திர குஹா, அனுபம் ராய், தமிழ் சினிமா இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள், கடந்த ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் வட மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை கூறுவது தேசத்துக்கு விரோதமானதாக கருத முடியாது,’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதை அடிப்படையாக வைத்து, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா என்பவர், பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, 49 பிரபலங்கள் மீதும் பீகார் போலீசார் கடந்த வாரம் எப்ஐஆர் பதிவு செய்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு தேவையான ஆவணங்களை வக்கீல் சுதிர் குமார் ஓஜா சமர்ப்பிக்கவில்லை. இதனால், பொய் வழக்கு பதிவு செய்ததாக வக்கீல் சுதிர் குமார் ஓஜா மீது பீகார் போலீசார் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பீகாரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வக்கீல் மீது பொய் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், பிரபலங்கள் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு ரத்தாகும் என தெரிகிறது.

Tags : celebrities ,lawyer ,choserawn ,Revathi ,Mani Ratnam , Treason case ,49 celebrities, Mani Ratnam and Revathi withdrawn
× RELATED வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை...