கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை : நீர்மட்டம் 74.50 அடியாக உயர்வு

திருவண்ணாமலை : கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், அணையின் நீர்மட்டம் 74.50 அடியாக உயர்ந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வர தொடங்கியிருக்கிறது. அதனால், ஒசூர் பகுதியில் உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பியிருக்கிறது. அதன் ெதாடர்ச்சியாக, அங்கிருந்து உபரி நீர் கிருஷ்ணகிரி அணைக்கு திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி ஆணையின் மதகுகள் பழுதுபார்க்கும் பணி நடப்பதால், அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 52 அடி அளவுக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை. எனவே, தற்போது 42 அடி வரை மட்டுமே தண்ணீர் நிரப்பும் நிலை உள்ளது.

Advertising
Advertising

கேஆர்பி அணையில் தற்போது நீர்மட்டம் 42 அடியாகவும், கொள்ளளவு 764 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. எனவே, கேஆர்பி அணைக்கு வரும் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெளியேற்றுகின்றனர். இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாத்தனூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சுமார் 11 மாதங்களுக்கு பிறகு, அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் 74.50 அடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 1,116 மில்லியன் கன அடி உள்ளது. நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால், அணையின் நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், கேபிஆர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில்  தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் ஆற்றில்  வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. புதிய வெள்ளத்தை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி மக்கள்  மகிழ்ச்சியுடன் திரண்டு பார்த்து வருகின்றனர். இந்த வெள்ளத்தால்  நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள  சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்தபடி  வெள்ளம் ஓடுகிறது. இதனால் ஆற்றின்  இருகரைகளின் ஓரம் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு  வருவாய்த்துறையினர், காவல்துறையினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: