×

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேனி : மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரும், பிரவீன் தந்தை சரவணன், ராகுல் தந்தை டேவிட் ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர வேலூரை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது சபியையும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து தேனி சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், டாக்டர் வெங்கடேசன், முகமது சபியை ஜாமீனில் விடக்கோரி, தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர்களது வக்கீல்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று விசாரித்தார். அப்போது, முதல் குற்றவாளியான உதித்சூர்யாவுக்கு உயர்நீதிமன்றத்தில் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. எனவே, டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது எனக் கூறி 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

மாணவன் இர்பானுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஆள் மாறாட்ட வழக்கில் மாணவன் இர்பான் கடந்த 1ம் தேதி சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். இவரை நேற்று சேலம் கோர்ட்டில் இருந்து, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடுவர் மகேந்திரவர்மா முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, இவ்வழக்கு விசாரணை தேனி ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அங்கே ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து இர்பானை, தேனி ஜூடிசியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது பன்னீர்செல்வம், இர்பானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இர்பான் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். இவரை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி, சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே மனு செய்திருந்தனர். அப்போது உரிய ஆவணங்கள் சேலத்தில் இருந்து வரவில்லை என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இர்பான் கைது செய்தது தொடர்பான உரிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.


Tags : persons ,NEET , bail plea , 2 persons voted , favor of NEET
× RELATED விஏஓ ஜாமீன் மனு தள்ளுபடி