×

தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்து பெங்களூரு- காரைக்கால் ரயிலை கவிழ்க்க சதியா?

சேலம் : பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலை கவிழ்க்க சின்னசேலம் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் நேற்று காலை புறப்பட்டது. சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் வந்தது. பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே புக்கிரவாரி ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த பெரிய கல்லை மோதியபடி ரயில் சென்றது. இதனால், ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்தது. இதனையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர்  அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை போட்டு வைத்திருந்தது தெரிந்தது. ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் யாராவது இதனை செய்துள்ளனரா அல்லது சிறுவர்கள் வைத்து சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஆத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த கிளிப்புகள் கழற்றி, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மர்மநபர்களை கைது செய்ய முடியாமல் ரயில்வே போலீசார் திணறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Karaikal ,Bangalore , Bangalore-Karaikal train ,toppled,cement chilap
× RELATED 7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்