மோடி - ஜின்பிங் சந்திப்பு விரிவான முன்னேற்றம் ஏற்பட வழி வகுக்கும் : சீன வெளியுறவு அமைச்சர் தகவல்

பீஜிங் : மோடி - ஜின்பிங்கின் சந்திப்பு இருநாடுகள் இடையிலான விரிவான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நாளையும், நாளை மறுதினமும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீன வெளியுறவுத்துறை இணை அமைச்சர் லுவா ஜவாஹூய் கூறியதாவது: ஜின்பிங் - மோடி சந்திப்பது, இது இரண்டாவது முறையாகும். முதல் முறையாக கடந்தாண்டு சீனாவின் யுகான் நகரில் சந்தித்தனர். அதற்கு முன்னர் ஏறக்குறைய 73 நாட்களாக டோக்லம் பகுதியில் இருநாடுகளின் ராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்து கொண்டது பதற்றத்தை தணித்தது. அதன் பிறகு இருநாடுகளிடையிலான உறவு சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சந்திப்பிற்கு பிறகு இரு தலைவர்களிடையேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு இல்லாமல் இரண்டாவது சந்திப்பு சாத்தியமில்லை. இந்த சந்திப்பு இருநாடுகளின் விரிவான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்னைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும். இதன் மூலம், இருநாடுகள் இடையிலான நட்புறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கு இந்தியா ஆதரவு?

இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இந்த சந்திப்பின் போது, அருணாச்சல பிரதேசத்தில் 3500 கிலோமீட்டர் தூரமுள்ள  இந்தோ-சீனா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, அங்கு அமைதி நிலவுவதற்கான  முயற்சிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஜின்பிங் கேள்வி எழுப்பினால் பதிலளிக்க மோடி தயாராக இருக்கிறார். அமெரிக்கா-சீனா இடையில் வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாடுகள் இடையிலான வர்த்தகம், தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேசப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று தெரிவித்தனர்.

Related Stories: