மாரடைப்பு, பக்கவாதம் உடனடி சிகிச்சைக்கு செல்ல அரசு மருத்துவமனையின் தாய் சிகிச்சை மையம் கூகுள் வரைபடத்தில் இணைப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: மாரடைப்பு, பக்கவாதம் உட்பட அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் உடனடியாக சிகிச்சை பெற வசதியாக அரசு மருத்துவமனையின் தாய் தீவிர சிகிச்சை மையங்கள் கூகுள் வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை விபத்து மற்றும் அவசர காலங்களில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தால் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசின் மக்கள்  நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகள், உயர் தொழில்நுட்ப உயிர் காக்கும் மருத்துவ  உபகரணங்களுடன் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

உயிர் காக்கும் பொன்னான மணித்துளிகள் வீணாவதை தடுக்கும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் ரத்த பரிசோதனை நிலையம், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு  ஆய்வு முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலமாக விபத்தில் சிக்கியவர்களின் பாதிப்புகள் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், விபத்து மற்றும் அவசர காலங்களில் அரசு மருத்துவமனைக்கு  எளிதாக செல்லும் வகையில் கூகுள் வரைபடத்தில் தாய் அவசர சிகிச்சை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள 80 அரசு மருத்துவமனைகளில் தாய் தீவிர  சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய் அவசர சிகிச்சை மையத்தில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவசர காலங்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு எளிதாக சென்று சேரும் வகையில் கூகுள் வரைபடத்தில் தாய் தீவிர சிகிச்சை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசரகாலங்களில் செல்போன் உதவியுடன்  கூகுளில் சென்று எஸ்டிஇஎம்ஐ என்று டைப் செய்து தேடினால் அருகில் உள்ள தாய் தீவிர சிகிச்சை மையம் உள்ள அரசு மருத்துவமனையின் விவரம், செல்லும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டு உடனடியாக  தீவிர  சிகிச்சை மையத்திற்கு சென்று சேரலாம். இதனால் உயிரிழப்புகள் தடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: