ஆட்டோவில் மது குடித்த பெண் வலைதளங்களில் வைரலாகும் வீடியோ: பொள்ளாச்சியில் டிரைவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பட்டப்பகலில் ஆட்டோவில் அமர்ந்து பெண் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.  பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில்  உள்ள ஒரு ஓட்டலின் அருகே கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு, ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை வடுகபாளையத்தை சேர்ந்த டிரைவர் செல்வகுமார்(48) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த ஆட்டோவில்  பயணித்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கிய மதுபாட்டிலை வெளியே எடுத்தார்.  பின்னர், பாரில் சாவகாசமாக அமர்ந்து மது அருந்துவதுபோல் திறந்த வெளியில் ஆட்டோவில்  இருந்து ஜாலியாக மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவரும், அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தபடி முன் இருக்கையிலிருந்து புகை பிடித்து கொண்டிருந்தார்.

பட்டப்பகலில் பொது இடத்தில் எந்தவித கூச்சமும் இல்லாமல், மது அருந்திகொண்டிருந்த அந்த பெண்ணின் செயலை, அந்த வழியாக சென்ற சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த மது குடித்துவிட்டு பாட்டிலை ரோட்டோரம்  வீசியுள்ளார். அதை பார்த்த சிலர், இப்படி மதுபாட்டிலை பொது இடத்தில் வீசலாமா?, இது அசிங்கமாக இல்லையா? என கேட்டுள்ளனர். இதையும் சிலர் படம் பிடித்ததுடன், அதனை  சமூக வலைதளங்களில் பரப்பினர். சுமார் மூன்று நிமிடங்கள்  வரை ஓடும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளத்தில் பரவிவரும் இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து கண்டறிய, மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி மேற்கு போலீசார்  விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆட்டோவில் மது குடித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கவுதமி என்பது தெரியவந்தது அவர், பொள்ளாச்சியில் உள்ள தனது கணவரை பார்த்துவிட்டு, பின் ஊருக்கு பஸ் ஏறி செல்வதற்காக திருவள்ளுவர் திடலில் வைத்து  செல்வகுமாரின் வாடகை ஆட்டோவில் ஏறியுள்ளார். சிறிதுநேரத்தில் டாஸ்மாக் கடையை பார்த்ததும், அங்கு சென்று மதுவாங்கி ஆட்டோவில் அமர்ந்து குடித்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு போலீசார், பொது இடத்தில் மது அருந்த  அனுமதித்தது, பெண் மது குடிக்கும்போது தடுக்காமல் பொது இடத்தில் புகை பிடித்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில், டிரைவர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.  மேலும், பெண் மது குடிக்க  அனுமதிக்கப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வெளியூர் சென்ற கவுதமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>