அறந்தாங்கி தாலுகா அலுவலக வளாகத்தில் அதிகாரிகளால் தூக்கி வீசப்பட்ட விவசாயிகள் விண்ணப்பங்கள்

அறந்தாங்கி: அறந்தாங்கி தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் கவுரவ ஊக்கத்தொகை பெறுவதற்காக விவசாயிகள் கொடுத்த நூற்றுக்கணக்கான மனுக்கள் அதிகாரிகளால் தூக்கி வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் கவுரவ நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆனபிறகு, அனைத்து  விவசாயிகளுக்கு கவுரவ நிதி உதவி வழங்கப்படும் என திட்டத்தை மாற்றி அறிவித்தார். அதன்படி, பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை பெற விரும்பிய விவசாயிகள் ஒரு படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து,  விண்ணப்பத்தில் விவசாயியின் படத்தை ஒட்டி, அதனுடன் சுயஉறுதிமொழி படிவம், ஆதார்நகல், நிலத்தின் சிட்டா காப்பி, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வருவாய்த்துறையினரிடம் வழங்கினர்.அந்த படிவங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2  ஆயிரம் வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய தாலுகா அலுவலக வளாகம் (காவல்நிலையம், கோர்ட், தாலுகா அலுவலகம் இயங்கிய கட்டிடங்கள்) இடித்து  அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே அறந்தாங்கி காவல்நிலையம் இயங்கி வந்த பகுதியில், இன்ஸ்பெக்டர் அறை ஆதார் சேர்க்கை மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டிடமும் இடிக்கப்பட்டு வருகிறது.  ஆதார் சேர்க்கை மையமாக இருந்த அறையும், தற்போது இடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அறையில் பிரதம ரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை பெறுவதற்காக விவசாயிகள் வழங்கிய நூற்றுக்கணக்கான விண்ணப்பப்படிவங்கள்  கேட்பாரற்று குப்பை போல் கிடக்கின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. தூக்கி எறியப்பட்ட விவசாயிகளின் மனுக்களை சேகரித்து, அவர்களுக்கும்  பிரதமமந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: