2வது குழந்தை பெற்றுக்கொள்ள இடையூறாக இருந்ததால் முதல் மனைவியின் 6 வயது குழந்தை மாடியில் இருந்து கீழே வீசி கொலை

சென்னை: இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இடையூறாக இருந்ததால், முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். தாம்பரம் அருகே நடந்த இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலை நகர் சக்கரபாணி தெரு விரிவு  பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகள் ராகவி (6). கடந்த 2014ல் சரண்யா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, குழந்தை ராகவியை பார்த்துக்கொள்ள பார்த்திபன்  சூரியகலா (33) என்ற பெண்ணை 2016ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராகவி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள்.

Advertising
Advertising

நேற்று முன்தினம் பார்த்திபன் வேலை முடிந்து வந்து பார்த்தபோது ராகவி வீட்டில் இல்லை. இதனையடுத்து அவர் சூரியகலாவிடம் “ராகவி எங்கே” என கேட்டுள்ளார். அதற்கு சூரியகலா, “ராகவி மாடியில்தான் விளையாடிக் கொண்டிருந்தாள்”  என தெரிவித்துள்ளார். உடனே, பார்த்திபன் மாடியில் சென்று பார்த்தபோது ராகவி அங்கும் இல்லை. பின்னர் அருகிலுள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் தேடியும் ராகவியை காணவில்லை. சந்தேகத்தின் பேரில் வீட்டின் பின்புறத்தில் உள்ள  முட்புதரில் பார்த்திபன் தேடி பார்த்தபோது, அங்கு ராகவி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் ராகவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால்  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, சூரியகலா, ராகவி  மீது மிகவும் பாசமாக இருந்தது போன்று காட்டிக்கொண்டதும், அவள் இறந்ததை எண்ணி மனம் உடைந்து அழுதுகொண்டே இருந்ததும் போலீசாருக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, சூரியகலாவை காவல் நிலையம் அழைத்துச்  சென்று போலீசார் தீவிர விசாரித்ததில் ராகவியை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சூரியகலாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ராகவியின் மாமா சந்துரு கூறுகையில்,  “எனது தங்கையின் மகள் ராகவி, வீட்டிற்கு மிகவும் செல்லமான மகள். எனது தங்கையின் இறப்பிற்கு பின்பு பார்த்திபன், சூரியகலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது, சூரியகலா மீண்டும் கர்ப்பமானதால் பார்த்திபன் ஏற்கனவே நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தை வேண்டாம் என  தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்து, ராகவியை கொலை செய்துவிட்டால் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி சூரியகலா ராகவியை கொலை  செய்துள்ளார். இரண்டாவது குழந்தை தனக்கு வேண்டும் என தெரிவித்து, ராகவியை எங்களிடம் ஒப்படைத்து இருந்தால் நாங்கள் நன்றாக வளர்த்திருப்போம்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories: