×

உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் மோடி - ஜின்பிங் நாளை சந்திப்பு: 5000 போலீசார் குவிப்பு,.. எங்கும் சிசிடிவி கண்காணிப்பு

* சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தனி விமானத்தில் 4 கார்கள் சென்னை வந்தது. தமிழக அரசு சார்பில் 58 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் தேதி (நாளை)  சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழக தலைநகரான சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.

பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்துக்குள் 4 சக்கர  வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இரு நாட்டு தலைவர்களும் பார்வையிட உள்ள  கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை பகுதி  முழுவதும் குதிரை படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருகட்டமாக கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.  மோப்ப நாய்கள், கண்காணிப்பு  கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ச்ஜுனன் தபசு, கலங்கரை விளக்கம், வெள்ளை உருண்டை கல் ஆகியவைகளை பார்வையிட தொல்லியல் துறை 5 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் நகர்  முழுவதும் அழகாக காட்சி அளிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. தற்போது மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை  வரவேற்கும் வகையில் மாமல்லபுரத்தில் நேற்று மாணவ - மாணவிகளின் பேரணி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது மாணவ-மாணவிகள் இரு நாட்டு தலைவர்களின் படங்கள், கொடிகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகளில் 1000க்கும்
மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

சீன அதிபர் வருகையொட்டி அவர் பயணம் செய்வதற்காக, சீன நாட்டில் இருந்து நேற்று முன்தினம் 11.50 மணிக்கு பீஜிங்கில் இருந்து தனி விமானத்தில் 4 கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த 4 கார்களும் குண்டு  துளைக்காத நவீன வசதிகள் கொண்ட கார்கள் ஆகும். சீனாவில் இருந்து இந்த கார்கள் வருவது, விமான நிலைய ஊழியர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இந்த கார்களை, சீனாவில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பெற்று கொண்டு  விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு எடுத்துச் சென்றனர். தற்போது இந்த கார்கள், சீன அதிபர் தங்க உள்ள கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்துதான், 11ம் தேதி மற்றும் 12ம் தேதி மாமல்லபுரம் செல்கிறார்.

ஏற்பாடுகளை கவனிக்க 58 சிறப்பு அதிகாரிகள் :
மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வருகையையொட்டி சிறப்பு பணி மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 58 அதிகாரிகளை  நியமித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: சென்னை  மற்றும் மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் 11  மற்றும் 12 ஆகிய தேதிகளில் வருகிறார். மிகமிக முக்கிய விருந்தினரான அவரது வருகை, இடையூறின்றி நல்ல முறையில் அமையும் வகையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான ஆணைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்காகவும், அதற்கான  பணிகளை ஒருங்கிணைக்க 34 அதிகாரிகள், 10 சிறப்பு அதிகாரிகள், 10 பொறுப்பு அதிகாரிகள் மற்றும் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவிடப்படுகிறது.

முக்கிய விருந்தினர்கள் வந்து செல்லும் பகுதிகளில் சிறப்பு பணியில் நியமிக்கப்படும் இந்த அதிகாரிகளுக்கு ஆங்காங்கு பணியிடம் அளிக்கப்படும். முக்கிய விருந்தினர்களின் பயணம் மற்றும் போக்குவரத்தில் இடையூறு ஏதும் வராத வகையில்  அங்கிருந்தபடி அவர்கள் பணியாற்றுவார்கள். அந்த பணிக்காக சென்றுள்ள அதிகாரிகள், வழக்கமான தங்கள் பணியிடமான தலைமையக அலுவலகத்துக்கு வரவில்லை என்றாலும், அவர்களுக்கு அது பணியாற்றிய நாளாக கருதப்படும். மேலும்  அந்த அதிகாரிகளுக்கு பயணப்படி தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mamallapuram Modi ,police mobs ,Jinping ,everywhere ,CCTV , Peak security, Mamallapuram, Modi, Jinping, police focus, CCTV surveillance
× RELATED 45 ஆண்டு இருதரப்பு உறவு பைடன், ஜின்பிங் பரஸ்பரம் வாழ்த்து