சபரிமலையில் மீண்டும் ஹெலிகாப்டர் சர்வீஸ்: மண்டல காலம் முதல் தொடங்குகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் மண்டல காலம் முதல் மீண்டும் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்குகிறது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சாலை மற்றும் ரயில் மார்க்கமாகவே செல்ல முடியும். ரயிலில் சென்றால் கோட்டயம் அல்லது செங்கணூரில் இறங்கி  மேலும் 50 கி.மீக்கு மேல் வாகனங்களில் பயணிக்க வேண்டும். அதுபோல விமானத்தில் செல்பவர்கள் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் இறங்கி 175 கி.மீக்கு மேல் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். இந்த நிலையில் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் இருந்து ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர்  சர்வீசை நடத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவு இதற்கு வரவேற்பு இல்லை. இதனால் அந்த நிறுவனம் ஹெலிகாப்டர் சர்வீசை நிறுத்தி விட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் வேறு ஒரு புதிய நிறுவனம் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் சர்வீசை நடத்த முன்வந்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள காலடியில் இருந்து நிலக்கல் வரை  ஹெலிகாப்டர் சர்வீஸ் நடத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் 17ம் தேதி முதல் இது தொடங்குகிறது. தினமும் காலை 7, 8.35, 10.10, 11.45, பிற்பகல் 2, 3.35 மணிக்கு காலடியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு நிலக்கல் சென்றடையும். 35 நிமிடங்களில் காலடியில் இருந்து நிலக்கலை ெஹலிகாப்டர் சென்றடையும் என அந்த நிறுவனம்  தெரிவித்துள்ளது.

Related Stories: