×

சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மாமல்லபுரம் வருவதை ஒட்டி பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் நியமனம்

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக 34 அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் 12ம் தேதி வரை தங்கியிருக்கும் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க உள்ளார். எனவே, இரு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடிக்க தடை

இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான 22 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதி கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீன அதிபர் மற்றும், பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெற்றவுள்ள நிலையில், மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : President ,Modi ,Chinese ,Mamallapuram Mamallapuram , Chinese President, Prime Minister Modi, Mamallapuram, Security, Special Officers, Government of Tamil Nadu
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...