சவுதியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

ஈரான்: சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் கூறும்போது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த சவுதி விரும்பினால் அதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை சவுதி நிறுத்த வேண்டும். ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் அரசுப் படைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு தர எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகம் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கு பல்வேறு நாடுகள் மூலம் சவுதி பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தி அனுப்பியதாக ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் இது தொடர்பாக எந்தக் கருத்தும் சவுதி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். ஆனால் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை ஈரான் மறுத்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: