860 வால்ட் மின்சாரத்தைப் பாய்ச்சும் விலாங்கு மீன்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி!!

பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் ‘போராக்’ என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளைக் கண்டுபிடிக்க முயன்று வந்தார். இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரப்பர் கையுறைகளை எப்போதும் அவர் அணிந்திருந்தாலும், சில வேளைகளில் மின்சார அதிர்வுகளுக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை. ஆனால், அவர் அனுபவித்த கஷ்டங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. இவரது ஐந்து ஆண்டு தேடலின் பயனாக மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடமிருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ள மீனின் வகை இதுவாகும். இதற்கு முன்பு 650 வால்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாகப் பதிவாகியிருந்தது. இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார்.

‘போராக்’ என்று அறியப்படுகிற மின்சார விலாங்கு மீன் பிடிக்கும்போது கார்லோஸ் டேவிட் டி சாண்டனாவுக்கு பலமுறை ஷாக் அடித்துள்ளது. ‘போராக்’ என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன.

‘போராக்’ வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்துக் கொள்ளவும் இவை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த மீனிலுள்ள மூன்று உறுப்புகளால் இந்த மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags : Eel fish, electricity
× RELATED மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை...