×

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக இறைச்சி வளர்ப்பு..: இஸ்ரேலை சேர்ந்த உணவு நிறுவனம் சாதனை

ரெஹோவோட்: இஸ்ரேலை சேர்ந்த அலெப் ஃபார்ம்ஸ் என்னும் உணவு நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டு இறைச்சியை வெற்றிகரமாக வளர்த்துக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இறைச்சியை வளர்த்துக் காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலை சேர்ந்த அலெப் ஃபார்ம் உணவு நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த பயோ பிரிண்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. இந்த வகையில் பசுவில் இருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வளர்ச்சி பெற ஏதுவான சூழலில் செல்கள் வைக்கப்பட்டு பெருக்கமடைய வைக்கப்பட்டன. இறுதியில் அவை முழுமையான மாமிசமாக உருவாகும் தன்மையை பெற்றன.

3டி பயோ பிரிண்டிங் சொல்யூஷன்ஸ் உருவாக்கிய பயோ பிரிண்டர், இதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள 3டி பயோ பிரிண்டிங் சொல்யூஷன்ஸ், இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதால், விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்களுக்கு உணவளிக்க வழிவகை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் பூமியில் நிலவும் உணவு பற்றாக்குறை அபாயத்தை போக்கவும், இதன்மூலம் வழி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டு சோதனையானது தலைமுறை தலைமுறையாக உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான, ஒரு குறிப்பிடத்தக்க முதல் படியைக் குறிக்கிறது. அதே வேளையில், நமது இயற்கை வளங்களையும் இது பாதுகாக்க உதவும் என்று அலெப் ஃபார்ம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையமானது பூமியில் இருந்து சுமார் 248 மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Israeli ,time ,International Space Station , International Space Station, Meat, Israel, Food company, Russia
× RELATED திருவாரூரில் பருத்தி கொள்முதலில்...