நுங்கம்பாக்கம் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 110 சவரன் நகை, வெள்ளி கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 110 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன் (43). தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது வீட்டின் சாவியை புஷ்பா நகரை சேர்ந்த வேலைக்கார பெண் சந்தியாவிடம் கொடுத்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

வேலைக்கார பெண் சந்தியா வழக்கமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாவியை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பிறகு விஸ்வநாதன் அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்து பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். படுக்கை அறைக்கு சென்றபோது, பீரோ கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 110 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு விஸ்வநாதன் தகவல் அளித்தார். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீட்டின் கதவு உடைக்கப்படாமல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் வேலைக்கார பெண் சந்தியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் வீட்டின் சாவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு சாவி மூலம் வீட்டை திறந்து கொள்ளையடித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்றும் மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: